நம்முடைய கலாசாலையை 1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனகவல்லீ நாயிகா ஸமேத கருணாகரபெருமாள் ஏரிகாத்தராமர் எழுந்தருளியிருக்கும் த்வயம் விளைந்த திருப்பதி என்று ப்ரஸித்திபெற்ற ஸ்ரீ மதுராந்தகத்தில், நம்முடைய ஸ்ரீ அஹோபிலமடத்தில் 42 ம் பட்டத்தில் மூர்தாபிஷிக்தராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா சேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் என்ற திருநாமத்தை உடைய ஜகத்விக்யாதராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ இஞ்சிமேட்டு அழகியசிங்கர் சுபேந மநஸா த்யாதம் என்ற முறையில் ஸ்தாபித்தார். ஆரம்பத்தில் இக்கலாசாலை ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கரிடத்தில் காலக்ஷேபம் செய்த ப்ரஸித்த வித்வான்களைக் கொண்டு மதுராந்தகம் அஹோபிலமடத்தில் நடத்தப்பட்டு பின்னர் திருக்கோவிலுக்கு அருகிலே கலாசாலைக்காக கட்டடம் எழுப்பி அன்று முதல் இன்றுவரை ஸ்ரீமதழகியசிங்கர்களின் பரிபூர்ண அநுக்ரஹத்தின் பேரில் 78 வருஷமாக நடந்துவருகின்றது.
இக்கலாசாலையில் இந்த காலத்து வ்யாகரண, ந்யாய மற்றும் வேதாந்த சாஸ்திரங்கள் ஸம்ஸ்க்ருத மொழியின் மூலமாகவும் மற்றும் தமிழ் ஆங்கில பிரிவுகளில் சென்னை பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கலாசாலையில் படித்த வித்யார்த்திகள் பலர் ப்ரஸித்த வித்வான்களாக எழுந்தருளியிருந்தனர், இன்றும் எழுந்தருளியிருக்கின்றனர். நம்முடைய கலாசாலையில் மாணவர்கள் அனைத்துவிதமான சௌகர்யங்களுடன் கூடிய விடுதி இலவசமாக ஸ்ரீமத் அழகியசிங்கரின் அநுக்ரஹத்தின் பேரில் நடத்தப் பட்டு வருகிறது. இவ்வளவு சௌகர்யங்களோடு அதிக பணசெலவையும் பொருட்படுத்தாமல் நம் தேசிக ஸம்ப்ரதாய சிறுவர்களின் அபிவ்ருத்தியே முக்கியம் என்ற நோக்கத்துடனும் ஸ்ரீமத் அழகியசிங்கரின் க்ருபையால் நடத்தப்படுகிறது.